கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் கட்டும் பணி

தாழநல்லூரில் கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் கட்டும் பணியால் கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2023-05-15 18:45 GMT

பெண்ணாடம்:

பெண்ணாடம் அடுத்த தாழநல்லூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வெலிங்டன் ஏரியின் உபரி நீரானது தாழநல்லூர் கிராமத்தில் உள்ள நல்லபெருமாள் ஏரிக்கு வந்து பின்னர் அங்குள்ள தரைப்பாலம் வழியாக கோனூர் பெரிய ஏரிக்கு செல்கிறது.

இதனால் மழைக்காலங்களில் அந்த தரைப்பாலம் நீரில் மூழ்கி விடுவதால், அந்த சமயத்தில் அப்பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்கு கிராமத்தை விட்டு வெளியே சென்று வர முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதை தவிர்க்க கிராம மக்கள் அந்த இடத்தில் உள்ள தரைப்பாலத்தை இடித்துவிட்டு மேம்பாலம் கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன் பேரில் அங்கு மேம்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்கு பள்ளம் தோண்டப்பட்டு மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களுக்காக மேற்கொண்டு அங்கு பாலம் கட்டும் பணியை மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் சென்று வர தற்காலிக மாற்று வழியும் ஏற்படுத்தி கொடுக்கவில்லை.

இதனிடையே மேம்பாலம் கட்டும்பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் அவ்வழியாக திட்டக்குடியில் இருந்து தாழநல்லூருக்கு செல்லும் பஸ் மற்றும் விருத்தாசலத்தில் இருந்து தாழநல்லூருக்கு செல்லும் பஸ் ஆகிய இரண்டு பஸ்களும் வழக்கம்போல் தாழநல்லூர் கிராமத்தின் உள் பகுதிக்கு சென்று பயணிகளை ஏற்றி வராமல், கிராமத்தின் வெளிபகுதிக்கு மட்டும் வந்து செல்கிறது.

இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து பஸ் ஏறி வெளியூருக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் பாலம் அமைக்க தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் மழை நீர் அதிகளவில் செல்கிறது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் அப்பகுதியில் குளித்து விளையாடி வருகின்றனர். இதனால் அங்கு உயிர் பலி ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க கிடப்பில் போடப்பட்டுள்ள பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்