கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-22 14:18 GMT

கால்வாய் அமைக்கும் பணி

பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையின் இருபுறமும் கடந்த 8 மாதங்களாக கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருபுறம் உயரம் கூடுதலாக கால்வாய் கட்டப்பட்டது. மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் அதனை இடித்து அகற்றிவிட்டு உயரம் குறைவாக கால்வாய் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த வாரம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 30-க்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆங்காங்கே கால்வாய் கட்டுவதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் அவதி

இதனால் சாலையை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், முதியோர்கள் ஆபத்தான முறையில் கால்வாயை கடந்த வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதியில் இருந்து இறந்தவர்களின் உடலை அந்த வழியாக எடுத்து செல்ல முடியாமல் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது.

குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாய் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருவதால் வியாபாரிகள் தங்களது கடைகளை திறக்காமல் பல நாட்களாக மூடியே வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரும் கடந்த 8 மாத காலமாக இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

விரைந்து முடிக்க கோரிக்கை

எனவே கால்வாய் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகினறது. பணிகள் முடியும்முன்பே பூக்கடை, பழக்கடைகள், இட்லி கடைகள் உள்ளிட்ட தள்ளுவண்டி கடைகள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே பள்ளிகொண்டா பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சாலை நடுவே தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்