தென்பெண்ணையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

ரூ.27 கோடி ஒதுக்கியும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 2 ஆண்டுகளாக மந்தகதியில் பாலம் கட்டும் பணிகள் நடக்கிறது. அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-01-21 19:58 GMT

கடலூர்:

கடலூர் மாவட்டத்தையும், புதுச்சேரி மாநிலத்தையும் பிரிக்கும் வகையில் தென்பெண்ணை ஆறு பாய்ந்தோடுகிறது. இதில் கடலூர் -புதுச்சேரி இடையே போக்குவரத்து வசதிக்காக ஆல்பேட்டையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 1891-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இரும்பிலான பாலம் கட்டப்பட்டது. பின்னர் வாகனங்கள் பெருக்கத்தின் காரணமாக, இந்த குறுகிய பாலத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அதன் அருகில் புதிதாக பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்ததும், பழைய இரும்பு பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் போக்குவரத்து வசதிக்காக தேசிய நெடுஞ்சாலை கடலூர்-புதுச்சேரி சாலையை விரிவாக்கம் செய்து வருவதுடன், ஆல்பேட்டை பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள ஆங்கிலேயர் காலத்து பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட முடிவு செய்து ரூ.27 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, பழைய பாலத்தை இடிக்கும் பணி முடிந்ததும், கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலம் கட்டுமான பணி தொடங்கியது.

மந்தகதியில் நடக்கும் பணி

ஆனால் பணிகள் தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியும், இதுவரை 50 சதவீத பணிகள் கூட முடிவடையவில்லை. மந்தகதியிலேயே நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது பயன்பாட்டில் உள்ள பாலமும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் புதிதாக கட்டும் பாலத்தை விரைந்து கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், நேற்று காலை தென்பெண்ணையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பாலம் கட்டுமான பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கலெக்டர் ஆய்வு

அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் சிறு பாலத்தையும், தென்பெண்ணையாற்றின் கரையில் கட்டப்படும் தடுப்புச்சுவரையும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கடலூர் தாசில்தார் பூபால சந்திரன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்