ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை

கொடியை அகற்றியதால் ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-08-13 15:16 GMT

திருவட்டார்:

கொடியை அகற்றியதால் ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

காங்கிரஸ் கொடி அகற்றம்

காங்கிரஸ் கட்சி சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொல்லங்கோட்டில் இருந்து நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஐந்தாவது நாளாக திற்பரப்பில் இருந்து சித்திரங்கோட்டுக்கு நடை பயணம் நடந்தது. திருவட்டார் ஆற்றூர் வழியாக பேரணி வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆற்றூர் பகுதிகளில் காங்கிரஸ் கொடிகளை கம்பங்களில் கட்டி இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென ஆற்றூர் பேரூராட்சி பணியாளர்கள் அந்த கொடிகளை அப்புறப்படுத்தியதாக தெரிகிறது. இதை அறிந்த திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெகன்ராஜ், வேர்க்கிளம்பி பேரூர் துணைதலைவர் துரைசிங் மனுவேல், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் ஏசுராஜா, மாவட்ட செயலாளர்கள் ஜாண் இக்னேசியஸ் காட்டாத்துறை காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாம் டிக்சன், ஆற்றூர் பேரூராட்சி கவுன்சிலர் சரசம், ஒன்றிய கவுன்சிலர் ஜெபா, வட்டார துணைத்தலைவர் ஓஸ்டின் ஞான ஜெகன் உள்பட பலர் ஆற்றூர் பேரூராட்சி அலுவலகம் வந்தனர். அவர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஷ்வரனிடம் கொடிகளை எப்படி அப்புறப்படுத்தலாம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

அதற்கு செயல் அலுவலர், 'பேரூராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் போது கொடிகளையும் அப்புறப்படுத்தி விட்டார்கள். பேரூராட்சியில் கொடிகள் கட்டுவது குறித்து என்னிடம் தெரிவித்திருந்தால் கொடிகளை அப்புறப்படுத்த கூறியிருக்க மாட்டேன்' என்றார்.

உடனே காங்கிரசார் மீண்டும் அதே இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் எடுத்த கொடிகளை கட்டவேண்டும் என்று வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தகவல் அறிந்ததும் குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயராம சுப்பிரமணியம், ராஜாங்க பெருமாள், ஜெயகுமார் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேரூராட்சி ஊழியர் கொடியை எடுத்த இடங்களில் கட்டுவார்கள் என செயல் அலுவலர் கூறியதை தொடர்ந்து 3 மணி நேரம் நடந்த முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்