அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

தவறான சிகிச்சையால் பெண்ணுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டதாக கூறி சேலம் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-04 19:45 GMT

தவறான சிகிச்சையால் பெண்ணுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டதாக கூறி சேலம் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணுக்கு பிரசவம்

சேலம் மாவட்டம் நங்கவள்ளி சின்னனூரை சேர்ந்தவர் மாணிக்கம், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சத்யா (வயது 29). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி பிரசவத்திற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சத்யாவிற்கு சத்து ஊசியும், வலது கையில் நரம்பு ஊசியும் செலுத்தப்பட்டது. இதையடுத்து 5 நாட்களுக்கு பிறகு சத்யாவின் வலது கண்ணில் வீக்கம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த அவரது உறவினர்கள் டாக்டர்களிடம் கேட்டபோது, ஊசி செலுத்தினால் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர்.

பார்வை பறிபோனது

பின்னர் சத்யாவிற்கு நரம்பில் ஊசி செலுத்தப்பட்டது. இருப்பினும், அவரது கண்ணில் இருந்த வீக்கம் குறையவில்லை. இதனால் சத்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களை சந்தித்து, முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர். மேலும், அவரை டிஸ்சார்ஜ் செய்யுங்கள், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொள்கிறோம். என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து சத்யாவை அவரது உறவினர்கள் டிஸ்சார்ஜ் செய்து தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வலது கண்ணில் பார்வை பறிபோய்விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் சத்யாவின் வலது கண் அகற்றப்பட்டது.

இதனிடையே, அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் சத்யாவின் பார்வை இழக்க நேரிட்டதாகவும், இதனால் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். ஆனால் இதுவரை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆர்ப்பாட்டம்

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினரும், பாதிக்கப்பட்ட சத்யா மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிடுவதற்காக சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர்.

பேச்சுவார்த்தை

இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சிலர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு நுழைவுவாயில் அருகில் அமர்ந்து சம்பந்தப்பட்ட டாக்டர்களை விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்பத்திரி டீன் மணியிடம் தகவல் தெரிவித்து விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதனால் அவர்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்