ஒப்பாரி வைத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

7 மாதங்களில் 9 செயல் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, ஒப்பாரி வைத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-20 16:38 GMT

ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில், கடந்த 7 மாதங்களில் 9 முறை செயல் அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு நிரந்தரமாக செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒப்பாரி வைத்து நேற்று போராட்டம் நடந்தது. இதற்கு 10-வது வார்டு கவுன்சிலர் மீனாட்சி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பிச்சமணி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் பரமேஸ்வரன், நகர செயலலாளர் முனீஸ்வரன் ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினார்கள்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்துக்கு பிறகு, ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். கடந்த 7 மாதங்களில், 9 செயல் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் விவாத பொருளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்