கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில் கல்லூரி கனவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது- அமைச்சர் சிவசங்கர் பேச்சு

கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில் கல்லூரி கனவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

Update: 2022-06-30 19:28 GMT

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் "நான் முதல்வன்" என்ற திட்டத்தின் கீழ், பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" என்ற நிகழ்ச்சி பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேசும்போது கூறியதாவது:- பள்ளி கல்வி முடித்த பிறகு, அடுத்து என்ன படிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வதற்கு நம்முடைய பெற்றோர் கல்வியறிவு பெற்றிருந்தால், அவர்களிடத்தில் கேட்போம், இல்லையென்றால் மற்றவர்களிடம் அல்லது ஆசிரியர்களிடம் கேட்போம், ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி கூடுதலாக வளர்ந்து வரும் சூழலில் புதிய புதிய பாடத்திட்டங்கள், கல்விமுறைகள் வந்து கொண்டிருப்பதால் எல்லோருக்கும் வழிகாட்டுவதற்கு ஏதுவாக அரசே ஒரு கல்லூரி கனவு திட்டத்தை உருவாக்கியுள்ளது.கிராமப்புற மாணவர்களுக்கும் பயன்படும் அளவிற்கு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எதிர்காலத்தில் என்ன படிக்கலாம், என்ன வேலைக்கு செல்லலாம் என்ற தெளிவினை மாணவர்களிடத்திலே ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தினை மாணவ-மாணவிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, பெரம்பலூர் மாவட்டம் பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தில் மாநிலத்திலேயே முதலிடமும், எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் மாநிலத்திலேயே 2-ம் இடம் பிடித்தமைக்கு முதன்மைக் கல்வி அலுவலருக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் அமைச்சர் சிவசங்கர் பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி கனவு என்ற தலைப்பில் வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து உயர்க்கல்வி படிப்புகள் மற்றும் அதனை சார்ந்த வாய்ப்புகள் சம்பந்தமாகவும் மாணவ- மாணவிகளின் அனைத்து வித சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் வகையில் நேற்று ஒரு நாள் முழுவதும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவழகன், தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மேலாண்மை இயக்குனர் மணி, கல்வி மாவட்ட அலுவலர்கள் சண்முகம், ஜெகநாதன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்