பாதிக்கப்பட்ட பகுதிகளை படகில் சென்று கலெக்டர் பார்வையிட்டார்

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மண் அரிப்பால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க உத்தரவிட்டார்.

Update: 2022-09-01 17:18 GMT

கடலூர், 

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திட்டுகாட்டூர், கீழகுண்டலபாடி, அக்கரைஜெயங்கொண்டபட்டினம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் புகுந்து அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அக்கரைஜெயங்கொண்டபட்டினம் பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மதிய உணவு

மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்காக அங்கு சமைக்கப்பட்டிருந்த மதிய உணவை பார்வையிட்டதோடு, அவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், மருத்துவ வசதிகளையும் தொடர்ந்து செய்து கொடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கீழதிருக்கழிபாலை சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையும் கலெக்டர் பார்வையிட்டு, அதை உடடினயாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிவாரணம் வழங்கப்படும்

அப்போது கலெக்டர் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், திட்டுகாட்டூர், கீழகுண்டலபாடி ஆகிய குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

பாதுகாப்பு கருதி சுமார் 65 பேர் 2 பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு மற்றும் அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்னும் ஓரிரு நாட்களில் குறைந்து விடும். குடியிருப்பு பகுதியில் தண்ணீர் வடிந்த பிறகு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின் போது சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்