மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு நரில் நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு நரில் நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

Update: 2022-11-23 18:45 GMT

வேதாரண்யத்தில் மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு நேரில் சென்று கலெக்டர் அருண்தம்புராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதனை பொதுமக்கள் பாராட்டினர்.

மாற்றுத்திறனாளி

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் கிராமத்தில் அழகு கவுண்டர் தெருவில் வசித்து வருபவர் நாகவள்ளி (வயது68). இவருடைய கணவர் மாரியப்பன். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகன் பாலசுப்பிரமணியன் (30) மாற்றுத்திறனாளி. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் மாரியப்பன் உயிரிழந்து விட்டார். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

மாற்றுத்திறனாளி மகனுடன், நாகவள்ளி ஒரு குடிசையில் வசித்து வருகிறார். இவர் எந்தவித வருமானமும் இன்றி தனது மகள்கள் மற்றும் மருமகன்கள் கொடுக்கும் பண உதவியுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.இவர்களும் ஏழ்மை நிலையில் உள்ளதால் நாகவள்ளிக்கு உதவமுடியாத நிலையில் உள்ளனர்.

வீடு வழங்க உத்தரவு

மாற்றுத்திறனாளி மகனை வைத்து கொண்டு கஷ்டப்படும் நாகவள்ளி குறித்து அறிந்த வேதாரண்யம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவக்குமார் என்பவர், நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் அருண்தம்புராஜை சந்தித்து அவரிடம் நாகவள்ளி மற்றும் அவரது மகன் குறித்து தெரிவித்தார். மேலும் நாகவள்ளி வீடு, மாற்றுத்திறனாளி மகன் பாலசுப்பிரமணியன் குறித்து செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோவை கலெக்டரிடம் காண்பித்தார்.

இதை தொடர்ந்து கலெக்டர் தனது செல்போனில் வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரை தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளி பாலசுப்பிரமணியனுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டி கொடுக்க ஆவணங்களை சரிபார்த்து உடன் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

நேரில் நலத்திட்ட உதவிகள்

பின்னர் சுகாதாரத்துறை துணை இயக்குனரை ெதாடர்பு கொண்டு நாகவள்ளி குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்ய உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடமும், பாலசுப்பிரமணியனுக்கு வேண்டிய பொருட்களை வழங்க வேண்டும். 5 மாதமாக நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உதவிதொகையை மாதந்தோறும் அவரது வீட்டுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து அரசு அதிகாரிகள் மாற்றுத்திறனாளி பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு சென்று அனைத்து உதவிகளுக்கான பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று மாற்றுத்திறனாளி குடும்பத்தை நேரில் சந்தித்து கலெக்டர் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது கலெக்டருக்கு குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

அப்ேபாது வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், மாவட்ட மாற்றுத்திறனாளி மாவட்ட அலுவலர் சீனிவாசன் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்