மாணவர்களை பஸ்சில் இருந்து இறங்க செய்த கலெக்டர்
மயிலாடுதுறையில் பஸ்சில் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்த மாணவர்களை பஸ்சில் இருந்து இறங்க செய்த கலெக்டர் அவர்களை வேறு பஸ்சில் அனுப்பி வைத்தார்.
மயிலாடுதுறையில் பஸ்சில் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்த மாணவர்களை பஸ்சில் இருந்து இறங்க செய்த கலெக்டர் அவர்களை வேறு பஸ்சில் அனுப்பி வைத்தார்.
படிக்கட்டில் பயணம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செம்பனார்கோவிலுக்கு ஆய்வு பணிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். மன்னம்பந்தல் பகுதியை கடந்து அவர் சென்ற போது எதிரே தரங்கம்பாடியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி ஒரு தனியார் டவுன் பஸ் வந்தது. இந்த பஸ்சின் படிக்கட்டில் கல்லூரி மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணம் செய்தனர். இதைக்கண்ட கலெக்டர் மகாபாரதி திடீரென காரை திருப்பிச் சென்று பஸ்சை மறித்து நிறுத்தினார். பின்னர் காரில் இருந்து இறங்கிய கலெக்டர் மகாபாரதி படியில் நின்று பயணம் செய்த மாணவர்களை கீழே இறங்கச் செய்து மற்றொரு பஸ்சில் பயணம் செய்ய ஏற்பாடு செய்தார்.
வேறு பஸ்சில்...
மேலும் அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டரை இருவரையும் அழைத்து பஸ்சின் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்ய யாரையும் அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தினார். நேற்று மாலை 4 மணியளவில் கல்லூரிகளின் வேலை நேரம் முடிந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. மேலும் அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் நிறுத்தி படியில் பயணம் செய்த மாணவர்களை இறக்கிவிட்டு வேறு பஸ்ஸில் பயணம் செய்ய ஏற்பாடு செய்தார்.
தூய்மைப்பணி
மயிலாடுதுறை நகரில் குப்பைகள் மற்றும் பாதாளசாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதை சரிசெய்தாலே மக்கள் நிம்மதி அடைவார்கள் என்பதை அறிந்து குப்பைகள் அகற்றும் பணியை துரிதப்படுத்தி தினந்தோறும் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று காவிரிக்கரை படித்துறை, காசிவிஸ்வநாதர் கோவில் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதாக தெரிவித்ததையடுத்து பொதுப்பணித்துறையினர் மற்றும் நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் காசிவிஸ்வநாதர் கோவில் படித்துறை பகுதியில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
அபராதம்
ஆனால் கலெக்டர் மகாபாரதி காவிரிதுலாக்கட்டம் பகுதிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தாா். அப்போது அங்கு அதிக அளவில் குப்பைகள் தேங்கி கிடந்தன. மேலும் வணிக நிறுவனங்களில் தேங்கும் குப்பைகள் காவிரிக்கரையோரம் கொட்டப்பட்டிருந்ததை கண்டு குப்பைகளை கொட்டும் வணிக நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.காவிரிக்கரையில் மதுபாட்டில்கள் கிடந்ததால் இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு காவிாிக்கரையில் இரவில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பழங்காவிரி தூய்மைப்படுத்தும் பணி
மேலும் மயிலாடுதுறை புதிய பஸ்நிலைய பகுதிகளில் கட்டண கழிவறை மற்றும் குப்பைகள் தேங்கி கிடந்த பகுதிகளை ஆய்வு செய்து குப்பைகள் முழுமையாக அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பழங்காவிரி தூய்மைப்படுத்தும் பணியை முறையாக மேற்கொள்ள பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார். அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.