குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்த சிறிது நேரத்திலேயே மாணவருக்கு சான்றிதழ்கள் வழங்கிய கலெக்டர்
குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்த சிறிது நேரத்திலேயே மாணவருக்கு சான்றிதழ்களை கலெக்டர் மோகன் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 422 பேர் மனுக்களை கொடுத்தனர். இம்மனுக்களை பெற்ற கலெக்டர், விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து பணியின்போது பாண்டியன் உயிரிழந்தையடுத்து அவரது குடும்ப வாரிசுதாரரான அவரது மனைவி ஜெயந்திக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணையை கலெக்டர் மோகன் வழங்கினார்.
தொடர்ந்து, கோலியனூரை சேர்ந்த மாணவன் அய்யப்பன், கல்வி கற்பதற்காக தனக்கு வருமான சான்று, இருப்பிட சான்று, வகுப்பு சான்றிதழ் கேட்டு மனு அளித்ததை தொடர்ந்து மாணவரின் கல்வியை கருத்தில் கொண்டு விழுப்புரம் தாசில்தாரை அழைத்து உடனடியாக தேவையான சான்றிதழை தயார் செய்ய உத்தரவிட்டதன்பேரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் முடிவதற்கு முன்பாகவே அம்மாணவர் கேட்ட 3 சான்றிதழ்களையும் கலெக்டர் மோகன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.