கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
ஜோலார்பேட்டை அருகே நடந்த குடியரசுதின விழாவில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசிய கொடி ஏற்றிவைத்து, ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கலெக்டர் கொடியேற்றினார்
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம்சார்பில் ஜோலார்பேட்டை ஒன்றியம், பாச்சல் கிராமத்தில் உள்ள ஆயுதபடை மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுடன் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நலத்திட்ட உதவி
பின்னர் சிறப்பாக பணியாற்றிய 21 காவலர்களுக்கு பதக்கத்தையும், சார்பாக சிறப்பாக பணியாற்றி 87 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிகளையும் வழங்கினார். விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் 12 கலை குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், கேடயங்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.
மேலும்பல்வேறு துறைகள் சார்பில் 129 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 44 இலட்சத்து 31 ஆயிரத்து 418 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
விழாவில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) வில்சன் இராசசேகர், ஹரிஹரன், முத்தையன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் பிரேமலதா, லட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, இணை இயக்குநர்கள் (வேளாண்மை) பாலா, (மருத்துவம்) மாரிமுத்து, சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், பல்வேறு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.