மருத்துவக்கல்லூரி விடுதி மாணவர்களுக்கு கலெக்டர் இனிப்பு வழங்கினார்
ரூ.2.12 கோடியில் கட்டப்பட்ட கட்டிடம் திறக்கப்பட்டதைதொடர்ந்து மருத்துவக்கல்லூரி விடுதி மாணவர்களுக்கு கலெக்டர் இனிப்பு வழங்கினார்
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் 100 மாணவர்கள் தங்கும் பிற்படுத்தப்பட்டோர் நல மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து தஞ்சையில் உள்ள விடுதி கட்டிடத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப், மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரேணுகாதேவி, தஞ்சை வருவாய்கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல், தாசில்தார் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். பின்னர் விடுதி மாணவர்களுக்கு இனிப்புகளையும் கலெக்டர் வழங்கினார். இந்த விடுதி கட்டிடத்தில் மொத்தம் 10 அறைகள் உள்ளன. ஒரு அறைக்கு 10 மாணவர்கள் தங்கும் வகையில் இந்த விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ்தளத்தில் சமையல் கூடமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.