சிறுமியின் நடப்பாண்டிற்கான கல்வி கட்டணத்தை கலெக்டர் ஏற்றார்
திருச்சி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உதவி கோரிய சிறுமியின் நடப்பாண்டிற்கான கல்வி கட்டணத்தை கலெக்டர் ஏற்றார்.
திருச்சி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உதவி கோரிய சிறுமியின் நடப்பாண்டிற்கான கல்வி கட்டணத்தை கலெக்டர் ஏற்றார்.
முதல்-அமைச்சரிடம் உதவி கோரிய சிறுமி
திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தபோது, ஒரு சிறுமி முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உதவி கோரினார். உடனடியாக மாவட்ட கலெக்டரிடம் சிறுமியின் கோரிக்கையை விசாரித்து உதவிடுமாறு முதல்-அமைச்சர் கூறினார்.
அதன்பேரில் கலெக்டர் பிரதீப் குமார் சிறுமியின் தாயாரிடம் மனுவை பெற்று உடனடி விசாரணை மேற்கொண்டதின் அடிப்படையில், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் நீளிகோணம்பாளையம் என்.கே.ஜி.நகர் என்ற முகவரியை சேர்ந்த முத்துக்குமார் மனைவி கவிதா என்பவர் தனது கணவர் கடந்த மார்ச் மாதம் அவரது சொந்த ஊரான மருங்காபுரி தாலுகா கண்ணூத்து கிராமத்தில் இறந்துவிட்டதாகவும், அவரது சொத்துகள் கூட்டுரிமையாக உள்ளதால் அதனை விற்பனை செய்ய தனது மாமியார் இடையூறு செய்வதாகவும் தெரிவித்தார்.
கல்விக்கட்டணம்
மனுதாரரின் கணவர் பெயரிலிருந்து அவரது இறப்பின் காரணமாக கூட்டுரிமையாக பெறப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்ய ஏதுவாக சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் பொருட்டு அனைத்து சட்டரீதியான உதவிகளும் இலவச சட்ட உதவி மையம் மூலம் செய்யப்படும் எனவும், மேலும் சிறுமியின் இந்த ஆண்டிற்கான கல்விக்கட்டணம் முழுவதையும் மாவட்ட கலெக்டரின் தன்விருப்ப நிதியில் இருந்து செலுத்துவதாகவும் மாவட்ட கலெக்டரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மனுதாரருக்கு தகுதியின் அடிப்படையில் கோவையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்படும் குடியிருப்புகளில் கோவை மாவட்ட கலெக்டர் மூலமாக அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மனுதாரர் கல்வி தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு உதவியும் கோவை மாவட்ட கலெக்டர் மூலம் செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.