ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
கூடலூர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் குனில் வயல் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் மூங்கில்கள் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் குனில் வயல் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் மூங்கில்கள் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கனமழை
நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளது. கூடலூர் பகுதியில் தினமும் மாலை நேரத்தில் சாரல் மழை பெய்து வருவதால், கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை முதலே கூடலூர் பகுதியில் மிதமான வெயில் அடித்தது. பின்னர் மதியம் வானம் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு கூடலூர், தேவர்சோலை சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் கனமழையாக பெய்தது.
ஊருக்குள் புகுந்த வெள்ளம்
இதனால் முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட குனில் வயல் பகுதியில் உள்ள கால்வாயில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் தொரப்பள்ளி-குனில் வயல் சாலையை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் அப்பகுதியை சேர்ந்த சில வீடுகளின் மேற்கூரைகள் உடைந்து விழுந்தது.
மேலும் அப்பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மூங்கில்கள் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் குனில்வயல் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை நின்ற பிறகு சாலையில் தேங்கிய வெள்ளம் வடிந்தது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் விரைந்து வந்து சாலையின் குறுக்கே கிடந்த மூங்கில்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.
தூர்வார வேண்டும்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மகாத்மா காத்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கால்வாயை தூர்வார வனத்துறையினர் அனுமதி அளிப்பதில்லை. இதனால் பராமரிப்பின்றி கிடந்ததால் மழை நீர் ஊருக்குள் புகுந்து விட்டது. எனவே, கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.