2 வயதில் கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற குழந்தை

திருக்குறள், தேசிய தலைவா்களின் பெயர்களை கூறி 2 வயதில் கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கொள்ளிடத்தை சேர்ந்த குழந்தைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Update: 2022-06-08 18:30 GMT

கொள்ளிடம்:-

திருக்குறள், தேசிய தலைவா்களின் பெயர்களை கூறி 2 வயதில் கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கொள்ளிடத்தை சேர்ந்த குழந்தைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

2வயது குழந்தை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் அசாமில் இந்திய விமானபடையில் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி யாமினி. இவர்களுடைய மகன் அகரமுதல்வன்(வயது2) குழந்தை அகரமுதல்வன் பெற்றோர்கள் கூறும் பொருளை நன்கு நினைவில் வைத்துக்கொண்டு மீண்டும் கேட்கும்போது மறக்காமல் மழலை மொழியில் கூறும் திறன் பெற்று இருந்தான். குழந்தையின் இந்த திறனை அறிந்த ஜெகதீஸ்வரன்- யாமினி தம்பதியினர் குழந்தையின் தனித்திறமை மேலும் மெருகேற தினமும் பயிற்சியளித்தனர்.திருக்குறள், தமிழ் உயிர் எழுத்துக்கள், தமிழ், ஆங்கில மாதங்களின் பெயர்கள், எண்கள், இந்தியில் 1 முதல் 10வரையிலான எண்கள் ஆகியவற்றை கூறி குழந்தைக்கு பயிற்சி அளித்தனர். குழந்தை அகரமுதல்வனும் பெற்றோர் கூறுவதை மீண்டும் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான்.

கலாம் சாதனை புத்தகம்

குழந்தையின் திறமையை பார்த்த பெற்றோர்கள் அவனுக்கு ஊக்கமளித்து, குழந்தையின் இந்த திறமையை கலாம் உலக சாதனை குழுமத்துக்கு எடுத்து சென்றனர். குழந்தையின் தனித்திறமையை குழுமத்தின் அறிவுறுத்தல் படி வீடியோவாக எடுத்து அனுப்பினர்.குழந்தை அகரமுதல்வன் திருக்குறள் 3, தமிழ் உயிர் எழுத்துகள், வாரங்கள் மற்றும் மாதங்கள், எண்கள் (தமிழ், ஆங்கிலம், ஹிந்தி), தேசிய தலைவர்களின் பெயர்கள், பல்வேறு நாடுகளின் தேசிய கொடிகள், சமையல் பொருட்கள், உபகரணங்கள், படிப்பு உபகரணங்கள், ரைம்ஸ், பறவைகள், வாகனங்கள், விலங்குகள், பழங்கள், காய்கறிகள், உடல் உறுப்புகள் ஆகியவற்றின் பெயர்களை கூறி(ஆயிரம் வார்த்தைகள்), கலாம் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு 2 வயதுக்குள் இடம் பெற்று விட்டார். மேலும் அகரமுதல்வனின் திறமையை அங்கீகரித்து எளிதில் கிரகித்து புரிந்து உணர்ந்து கொள்ளும் திறமையுள்ள அசாதாரணமான மேதகு குழந்தை என்ற பட்டத்தையும், பதக்கங்களையும் வழங்கி உலக சாதனையாக பதிவு செய்து அங்கீகரித்து உள்ளது. சாதனை படைத்த குழந்தை அகரமுதல்வனை பல்வேறு தரப்பினர் பாராட்டி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்