சிறிய வகை வேளாண் எந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாய கருவிகள் வழங்கும் திட்டம் முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

சிறிய வகை வேளாண் எந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் விவசாய கருவிகளை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-05 00:13 GMT

சென்னை,

சென்னை கிண்டி வேளாண் தொழில்நுட்ப பசுமை பூங்காவில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்திற்காக கட்டப்பட்டுள்ள நிர்வாக கட்டிடம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளானந்தலில் கட்டப்பட்டுள்ள சமையல் எண்ணெய்களுக்கான எந்திரங்களுடன் கூடிய நவீன சிப்பம் கட்டும் அமைப்பு மற்றும் சந்தை ஊக்குவிப்பு மையம்,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர், வல்லம், செஞ்சி; கடலூர் மாவட்டம் குமராட்சி, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில்; கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை; அரியலூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் என மொத்தம் ரூ.62.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண்மை, உழவர் நலத்துறை கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

வேளாண் எந்திரங்கள்

2023-24-ம் ஆண்டிற்கான வேளாண்மை, உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில், "தமிழ்நாட்டில் நாளுக்குநாள் குறைந்து வரும் விவசாயிகளின் நில உடமையினை கருத்தில் கொண்டு, சிறிய வகை வேளாண் எந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் அவசியம் கருதி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில், ஒரு கிராமத்திற்கு 2 'பவர்டில்லர்' எந்திரங்கள் என்ற அடிப்படையில் வரும் நிதியாண்டில், 2,504 கிராமங்களுக்கு ரூ.43 கோடி மானியத்தில் 'பவர்டில்லர்'கள் வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, குறைந்த அளவு பரப்பில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள், சிறிய வகை வேளாண் எந்திரங்களை கொண்டு உழவுப்பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, முதற்கட்டமாக ரூ.35 கோடி மானியத்தில் 3,907 விவசாயிகளுக்கு 'பவர்டில்லர்'கள் மற்றும் 293 விவசாயிகளுக்கு விசை களையெடுப்பான் கருவிகள் என மொத்தம் 4,200 விவசாயிகளுக்கு இக்கருவிகள் வழங்கப்படுகிறது.

இதை தொடங்கி வைக்கும் விதமாக முதல்-அமைச்சர் நேற்று 2 விவசாயிகளுக்கு 'பவர்டில்லர்'கள் மற்றும் ஒரு விவசாயிக்கு விசை களையெடுப்பான் கருவி வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார்.

வறட்சி நிவாரண நிதி

கடந்த 2022-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைவாக மழை பெய்த காரணத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 34 ஆயிரத்து 305 விவசாயிகளுக்கு ரூ.132.71 கோடியும், சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 25 ஆயிரத்து 847 விவசாயிகளுக்கு ரூ.25.77 கோடியும், தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 17 ஆயிரத்து 96 விவசாயிகளுக்கு ரூ.13.85 கோடியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 6,746 விவசாயிகளுக்கு ரூ.6.63 கோடியும்,

விருதுநகர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 3,220 விவசாயிகளுக்கு ரூ.2.40 கோடியும், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 61 விவசாயிகளுக்கு ரூ.4.43 லட்சம் என மொத்தம் ரூ.181.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட வறட்சி நிவாரண நிதியை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிதமான வேளாண் வறட்சி நிவாரணம் வழங்கும் பணியை தொடங்கி வைக்கும் விதமாக முதல்-அமைச்சர் நேற்று 3 விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்