அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.323 கோடியில் விலையில்லா சைக்கிள் முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு ரூ.323 கோடியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை, சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

Update: 2022-07-26 00:22 GMT

சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா சூழல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

தற்போது கொரோனா ஓய்ந்துள்ள சூழலில் இந்த திட்டத்துக்கு மீண்டும் உயிரூட்டப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் 2021-22-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-1 படித்த 6 லட்சத்து 35 ஆயிரத்து 947 மாணவ-மாணவிகளுக்கு ரூ.323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 செலவில் சைக்கிள் வழங்க திட்டமிடப்பட்டது.

விலையில்லா சைக்கிள் திட்டம்

அதன்படி தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்ட தொடக்க விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மண்டலக்குழு தலைவர்கள் தனசேகரன், மதன்மோகன், டாக்டர் நா.எழிலன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைக்கும் அடையாளமாக பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 10 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதனைத்தொடர்ந்து வளாகத்தில் சைக்கிள் பெற காத்திருந்த மாணவ-மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது 'நன்றாக படிக்கவேண்டும்' என்று மாணவர்களை அவர் வாழ்த்தினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் (என்.எஸ்.எஸ்.) மற்றும் சாரணர் பிரிவு மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து விழா மேடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் புத்தகத்தை பரிசாக வழங்கி வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலாளர் ஆர்.கார்த்திக், பிற்படுத்தப்பட்டோர் நல கமிஷனர் அணில் மேஷ்ராம், ஆதிதிராவிடர் நலத்துறை கமிஷனர் சோ.மதுமதி, பள்ளி கல்வித்துறை கமிஷனர் க.நந்தகுமார், மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

'சார், லேப்டாப் எப்போ தருவீங்க?' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்ட மாணவி

விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதன்பின்னர் மாணவ, மாணவிகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

அப்போது ஒரு மாணவி, 'சார் சைக்கிள் தந்துட்டீங்க... லேப்டாப் எப்போ தருவீங்க?' என்று கேள்வி எழுப்பினார். உடனே அந்த மாணவி அருகே சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ''சீக்கிரம் வரும்மா...'' என்று அன்புடன் கூறி சென்றார்.

முதல்-அமைச்சர் படம் இல்லாமல் விலையில்லா சைக்கிள்

கடந்த ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள்களில் அப்போதைய முதல்-அமைச்சர்களின் படங்கள் ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்டிருந்தன. ஆனால் நேற்று வழங்கப்பட்ட சைக்கிள்களில் இருந்த முன்கூடைகளில் தமிழக அரசின் சின்னம் மட்டுமே பொருத்தப்பட்டு இருந்தது. முதல்-அமைச்சரின் படம் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்