சென்னை மணிமண்டப வளாகத்தில் அம்பேத்கர் முழு உருவச்சிலை முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்

சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவச்சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2022-10-27 23:34 GMT

சென்னை,

சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் அம்பேத்கர் மணிமண்டபம் அமைந்துள்ளது. அந்த மணிமண்டபத்தின் வளாகத்தில் அம்பேத்கரின் முழு உருவச்சிலையை நிறுவுவதற்காக அவரது 132-வது பிறந்த நாளன்று (கடந்த ஏப்ரல் 14-ந் தேதி) விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் அந்த சிலையை அரசிடம் வழங்கி இருந்தார்.

அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 14.5.2022 அன்று அம்பேத்கர் மணிமண்டபத்தில் சிலை நிறுவுவதற்கான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவச்சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சி.வி.கணேசன், மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், கிரிராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, வேலு, சிந்தனைச்செல்வன், செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ்.பாலாஜி, எம்.பாபு, முகம்மது ஷா நவாஸ், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

16 அடி உயரம்

அம்பேத்கரின் முழு உருவச்சிலை 8 அடி உயரம் கொண்டதாகும். அம்பேத்கர் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 அடி உயர பீடத்தில் அவரது முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்திருப்பதுபோல் அம்பேத்கரின் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பு விழா நடந்தபோது பலத்த மழை பெய்தது. ரிமோட் மூலம் சிலையை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் குடையுடன் வந்து அந்த சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்