ஒப்பந்தம் மேற்கொள்ள கல்வி சான்றிதழ் சந்தைப்பொருள் அல்ல ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

ஒப்பந்தம் மேற்கொள்ள கல்வி சான்றிதழ்கள் ஒன்றும் சந்தைப்பொருள் அல்ல என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-05-31 20:49 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் கிரிதரன் உள்பட 25 டாக்டர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், "சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை முதுகலை மருத்துவ கல்வி படித்து தேர்ச்சி பெற்றோம். முதுகலை படிப்பில் சேரும்போது, 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவாதம் அளித்து அரசுடன் ஒப்பந்தம் செய்து இருந்தோம். அதன்படி, 2021-ம் ஆண்டு பட்ட மேற்படிப்பை முடித்து நாங்கள் கொரோனா சிகிச்சை பிரிவில் 10 மாதங்கள் பணியாற்றினோம். இதன் பின்னர் புதிய பணி வழங்காததால், எங்களது அசல் கல்வி சான்றிதழ்களை கேட்டோம். ஆனால், 2 ஆண்டுகள் முழுமையாக அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றாததால், எங்களுக்கு கல்வி சான்றிதழை வழங்க அரசு கல்லூரி நிர்வாகம் மறுத்து விட்டது. எனவே, அசல் கல்வி சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும்" என்றும் கூறியிருந்தனர்.

உத்தரவாதம்

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், "மருத்துவ மேற்படிப்பில் சேரும்போது 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிறோம் என்று மனுதாரர்கள் அளித்த உத்தரவாதத்தை அவர்கள் அமல்படுத்த வேண்டும்" என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர்களுடன் மருத்துவ மேற்படிப்பு படித்த மாணவர்கள் அசல் கல்வி சான்றிதழ் கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சில நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பித்தார்.

இயக்குனர் உத்தரவு

அதை எதிர்த்து மாணவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஐகோர்ட்டு முதல் பெஞ்சில் நிலுவையில் இருந்தபோது, அந்த மாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ்களை திருப்பிக்கொடுக்கும்படி அனைத்து அரசு மருத்துவ கல்லூரி டீன்களுக்கும், மருத்துவ கல்வி இயக்குனர் கடந்த ஏப்ரல் 24-ந் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, மேல்முறையீட்டு மனு முடித்து வைக்கப்பட்டது. அந்த மாணவர்கள் படிப்பில் சேரும்போது அரசுக்கு அளித்த உத்தரவாதத்தை அமல்படுத்தாமல், அசல் கல்வி சான்றிதழ்களை பெற்றனர்.

ஒப்பந்தம் முடியாது

ஒரே விவகாரத்தில் அரசு 2 விதமான நிலைப்பாட்டை எடுக்க முடியாது, மேலும், ஒப்பந்தங்கள் மேற்கொள்ள கல்வி சான்றிதழ் ஒன்றும் சந்தைப்பொருள் அல்ல. அதை வைத்து இந்திய ஒப்பந்த சட்டத்தின் கீழ் ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ள முடியாது.

மாணவர்களின் கல்வி சான்றிதழ்களை மருத்துவ கல்லூரிகள் நிர்வாகம் இதுபோல வைத்துக்கொள்ள முடியாது. 15 நாட்களுக்குள் அசல் கல்வி சான்றிதழ்களை மனுதாரர்களுக்கு கல்லூரி நிர்வாகம் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்