மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடி செலவு செய்கிறது

மக்கள் நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடி செலவு செய்வதாக மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தெரிவித்தார்.

Update: 2022-10-06 18:20 GMT


மக்கள் நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடி செலவு செய்வதாக மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தெரிவித்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட தென்கடப்பந்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியந் முன்னிலை வகித்தார்.

இதில் மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குனர் மா.அண்ணாதுரை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ரூ.8 லட்சம் கோடி

மத்திய அரசில் வெவ்வேறு துறை சார்ந்த பெரும் எண்ணிக்கையிலான திட்டங்கள் இருந்தது. அவை முறைப்படுத்தி 157 திட்டங்களாக தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களுக்காக மட்டும் ஒவ்வொரு வருடமும் மக்கள் நலனுக்கென சுமார் ரூ.8 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடுகிறது. என்றார்.

தொடர்ந்து பேசிய கலெக்டர் அனைவரும் வாழ்க்கையில் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற தொழில் முனைவோராக உருவெடுக்க மத்திய அரசு வங்கிகள் மூலம் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய தொகுப்பு புத்தகத்தை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை வெளியிட, கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

கடன் உதவி

தொடர்ந்து ஊட்டச்சத்து இயக்கத்தின் சார்பில் ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகளாக தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கும், சிறந்த மதிப்பெண் எடுத்த கல்லூரி மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 15 சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே 9 லட்சம் கடன் உதவி மற்றும் 35 நபர்களுக்கு ரூ.50 லட்சத்து 75 ஆயிரம் தாட்கோ கடன்கள் வழங்கப்பட்டது.

மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை துகள்களாக்கி சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து இந்திய தகவல் பணியின் பயிற்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் விளக்கி கூறினார்.

மத்திய அரசு திட்டங்கள்

நிகழ்ச்சியில் மத்திய மக்கள் தொடர்பக மண்டல அலுவலக இயக்குனர் ஜெ.காமராஜ் திட்டங்கள் குறித்து உரையாற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் பிச்சுமணி முன்னிலை வைத்தார். வேலூர் மத்திய மக்கள் தொடர்பக கள அலுவலக உதவி அலுவலர் ஜெயகணேஷ் வரவேற்றார்.

அஞ்சல் துறையில் உள்ள திட்டங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் தரப்படும் திட்டங்கள், மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலம் தரப்படும் திட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டங்கள் என பல்வேறு வகை திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்