தேர்தல் ஆணையத்தின் சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்

கருத்து கணிப்புகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட தேர்தல் ஆணையம் முன்வைத்திருக்கும் 6 சீர்திருத்தங்களை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-15 22:22 GMT

சென்னை,

இந்தியாவின் தலைமைத்தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ராஜிவ்குமார், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு வசதியாக 6 தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

''ஒருவர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடுவதை தடை செய்தல், தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை தடை செய்தல், 18 வயது நிறைவடைந்தவர்களை 4 தகுதி காண் நாட்களை அடிப்படையாக வைத்து வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைத்தல், கட்சிகளை பதிவு நீக்கம் செய்வதற்கான அதிகாரம், ரூ.2000-த்திற்கும் கூடுதலாக பெற்ற அனைத்து நன்கொடைகளையும் அரசியல் கட்சிகள் தெரிவிப்பதை கட்டாயமாக்குதல்'' ஆகியவை தான் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த 6 சீர்திருத்தங்கள் ஆகும்.

தடைவிதிக்க வேண்டும்

தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ள 6 சீர்திருத்தங்களில் முதன்மையானது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளையோ, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளையோ வெளியிட தடை விதிக்கவேண்டும் என்பது தான்.

கருத்து கணிப்புகள் அறிவியல் பூர்வமானது என்ற நிலையிலிருந்து, அரசியல் பூர்வமானவையாக மாறிவிட்டன. ஒரு கட்சிக்கு ஆதரவாக கருத்து கணிப்புகள் திரிக்கப்படுகின்றன; திணிக்கப்படுகின்றன. அவ்வாறு திணிக்கப்பட்ட கருத்து கணிப்புகள் தேர்தல் முடிவுகளில் பண பலமும், அதிகார பலமும் படைத்த கட்சிகளுக்கு ஆதரவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதால் அவற்றை தடை செய்ய வேண்டும் என்று பா.ம.க. கடந்த பல பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

செயல்படுத்த நடவடிக்கை

குரேஷி உள்ளிட்ட ஓய்வுபெற்ற தலைமை தேர்தல் ஆணையர்கள் பலரும் கருத்து கணிப்புகளை தடைசெய்ய வேண்டும் என்று பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி உள்ளனர். எனவே, கருத்து கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தேர்தல் ஆணையம் முன்வைத்திருக்கும் 6 சீர்திருத்தங்களையும் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களையும், அரசியல் கட்சிகளையும் தகுதி நீக்கம் செய்யும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யவும் மத்திய அரசு முன்வரவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்