60 கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ள சுங்க சாவடிகளை மத்திய அரசு உடனடியாக அகற்ற வேண்டும்-லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் பேட்டி
60 கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ள சுங்க சாவடிகளை மத்திய அரசு உடனடியாக அகற்ற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர் குமாரசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
மகாசபை கூட்டம்
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 74-வது மகாசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு இடைவெளியில் உள்ள சுங்க சாவடிகள் அகற்றப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்து இருந்தார். இது லாரி உரிமையாளர்களுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. ஆனால் அவர் கூறி 7 மாதங்கள் ஆகியும் இதுவரை சுங்க சாவடிகள் அகற்றப்படவில்லை. எனவே, 60 கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ள சுங்க சாவடிகளை மத்திய அரசு உடனடியாக அகற்ற வேண்டும்.
போராட்டம்?
15 ஆண்டுகளுக்கு மேல், காலாவதியான வாகனங்களுக்கு தகுதிச்சான்று (பர்மிட்) பெற ரூ.850 கட்டணமாக இருந்தது. ஆனால் அதை மத்திய அரசு ரூ.15,500 ஆக உயர்த்தியது. இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க அனுமதி பெற்றுள்ளோம்.
இது போன்ற லாரி உரிமையாளர்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. எனவே, லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்.
மும்பையில் அடுத்த மாதம் நடைபெறும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க உள்ளோம். அப்போது, போராட்டம் அறிவிப்பதா? அல்லது எந்த அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
லாரி தொழில் பாதிப்பு
லாரி தொழிலுக்கு மிகவும் அத்தியாவசியமான தேவை டீசல் ஆகும். இந்த டீசலின் விலை சமீப காலத்தில் மிகவும் கடுமையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால் லாரி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, டீசல் விலையை குறைக்க வேண்டும். ஓமலூர் அருகே விதிகளை மீறி செயல்படும் சுங்க சாவடியை அகற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.