எதிர்பார்த்த வளர்ச்சி வராது என்பதை மத்திய அரசே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது-ப.சிதம்பரம் பேச்சு

பட்ஜெட்டில் வெறும் நம்பர்கள் மட்டுமே உள்ளன என்றும், இதனால் எதிர்பார்த்த வளர்ச்சி வராது என மத்திய அரசே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது என்றும் ப.சிதம்பரம் பேசினார்.

Update: 2023-02-10 19:37 GMT


பட்ஜெட்டில் வெறும் நம்பர்கள் மட்டுமே உள்ளன என்றும், இதனால் எதிர்பார்த்த வளர்ச்சி வராது என மத்திய அரசே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது என்றும் ப.சிதம்பரம் பேசினார்.

பட்ஜெட்

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில், மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்ஜெட் குறித்து விளக்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அது தயாரிக்கும் பட்ஜெட்டில்தான் அடங்கியுள்ளது. பட்ஜெட்டை சமூக, பொருளாதார கண்ணாடி போட்டு மட்டுமே பார்க்க வேண்டும். அரசியல் கண்ணாடி போட்டு பார்க்கக்கூடாது. அப்படி பார்த்தால், உங்களை தேடி அமலாக்கத்துறை மற்றும் புலனாய்வுத்துறை வந்து விடும்.

பொதுவாக நாட்டின் வளர்ச்சி என்பது ஜி.டி.பி. எனப்படும் மொத்த உற்பத்தியை சார்ந்துள்ளது. இதனை 4 சக்திகள் தீர்மானிக்கின்றன. மக்களின் நுகர்வு, அரசு முதலீடுகள், தனியார் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி ஆகியன. இவைதான், உலகம் முழுவதும் பின்பற்றப்படும் வளர்ச்சி குறியீடுகளாகும். நமது நாட்டில் மக்களின் நுகர்வு 60 சதவீதம் உள்ளது. ஆனால் இந்த பட்ஜெட் வெறும் நம்பர்களை மட்டும் கொண்டுள்ளது. அதன் மூலம் எதிர்பார்த்த வளர்ச்சி வராது என்பதை மறைமுகமாக மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது நுகர்வு குறைந்து பணவீக்கம், வேலையின்மை அதிகரித்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது. இந்திய-சீன வர்த்தக உறவில் இந்த ஏற்றுமதியானது 100 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.

5.6 சதவீத வளர்ச்சி

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு என்பதை மட்டும் பார்க்காமல், எவ்வளவு செலவிட திட்டமிடப்பட்டுள்ளது என்பதையும் சேர்த்து பார்த்தால்தான் குறைபாடுகள் என்ன என்பது தெரியும். இந்த அரசு ரூ.7,50,246 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், ரூ.7,28,274 கோடி மட்டும் செலவிடுகிறது. இதனால் எப்படி வளர்ச்சி ஏற்படும். வேளாண்மைக்கு ரூ.83,523 கோடி ஒதுக்கி, ரூ.76,271 கோடி செலவழித்துள்ளது. சுமார் 7 ஆயிரம் கோடி குறைவாக செலவழித்துள்ளது. கல்விக்கு ரூ.1,78,000 கோடி ஒதுக்கி ரூ.97,850 கோடி செலவழித்துள்ளது. மவுலானா ஆசாத் கல்வி உதவி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகையை ரத்து செய்துள்ளது. மருத்துவ துறைக்கு ரூ.86,606 கோடி ஒதுக்கி ரூ.76,359 கோடி செலவழித்துள்ளது. இந்த நிலையில் இருந்தால் எய்ம்சில் ஒரு செங்கல் மிச்சமானதே அதிசயம் தான்.

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், சிறுபான்மையினருக்கான நிதியையும் குறைத்துள்ளது. ஒதுக்கும் நிதியை செலவழிக்கும் எண்ணம் இல்லை. மத்திய மாநில அரசுக்கான நிதி பகிர்வில் இந்தாண்டு ரூ.63 ஆயிரம் கோடி குறைத்து தரப்பட்டுள்ளது. இவர்களின் 10 வருட சராசரி வளர்ச்சி என்பது ஆண்டுக்கு 5.6 சதவீதம்தான். ஆனால், 2014-க்கு முந்தைய 10 வருடங்களில் சராசரி வளர்ச்சி 7.5 சதவீதமாகும். இன்னும் 20 வருடங்களுக்கு சராசரியாக 8 சதவீத வளர்ச்சி இருந்தால் தான் நாட்டின் பொருளாதார நிலை முன்னேற்றமடையும்.

ஒற்றை வரி முறையை அமல்படுத்த வேண்டும் என்பது தான் ஜி.எஸ்.டி.யின் நோக்கம். ஆனால், பல்முறை வரி விதிப்பு மக்களை கடுமையாக பாதிக்கும் என்றேன். அவர்கள் கேட்காததால், இன்றைக்கு ஐகோர்ட்டுகளில் 4,950 வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் 33 வழக்குகள், 899 விலக்கு அறிக்கைகள் என 6 வருடங்களாக ஜி.எஸ்.டி. படாதபாடுபடுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்