வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்

வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்

Update: 2023-05-26 19:25 GMT

தஞ்சை டாஸ்மாக் பாரில் மது குடித்து 2 பேர் பலியானது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என இறந்தவரின் மனைவி மனு அளித்தார்.

2 பேர் பலி

தஞ்சை கீழ அலங்கத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் கடந்த 21-ந் தேதி கீழவாசல் படைவெட்டி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த மீன் வியாபாரி குப்புசாமி (வயது68), பூமால் ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்த கார் டிரைவர் விவேக் (36) ஆகியோர் மது அருந்திய நிலையில் பலியானார்கள். 2 பேரும் குடித்த மதுவில் சயனைடு கலந்து இருப்பதாக தடயஅறிவியல் ஆய்வக பரிசோதனையில் தெரியவந்தது.

இது தொடர்பாக தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பார் உரிமையாளர், ஊழியர்கள், டாஸ்மாக் பணியாளர்கள், குப்புசாமி குடும்பத்தினர், விவேக் குடும்பத்தினர், நண்பர்கள் என 9-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுள், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இறந்தவரின் மனைவி மனு

ஆனால், சம்பவம் நடந்து 6 நாட்கள் ஆகியும் போலீசார் விசாரணையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை என இறந்தவர்களின் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் நேற்று தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்ற இறந்த குப்புசாமி மனைவி காஞ்சனா தேவி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மூத்த மகனுக்கும் திருமணம் ஆகி விட்டது. எனது இளைய மகன் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். எனது கணவர் கடந்த 45 ஆண்டுகளாக மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

இயற்கை மரணம்

கடந்த 21-ந் தேதி எனது கணவர் வியாபாரத்திற்கு சென்று விட்டார். அன்றை தினமும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், நானும் எனது மகளும் வீட்டிற்கு மீன் வாங்குவதற்காக சென்ற போது, எனது கணவர் மீன்களை வாங்கி கொடுத்தார். நான் மீன்களை அருகில் உள்ள கடையில் வெட்டி சுத்தம் செய்து கொண்டு இருந்த போது, எனது கணவர் மயங்கி விழுந்துள்ளதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

நான் அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு முதலில் தனியார் கிளினீக்கிற்கு அழைத்து சென்றேன். அங்கு என் கணவரை பரிசோதித்த டாக்டர், ஒரு ஊசியை போட்டுவிட்டு மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கூறினார். நான் மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது எனது கணவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். நாங்களும் இயற்கையாக எனது கணவர் இறந்து விட்டதாக கருதி உடலை எடுத்து செல்லுவதாக டாக்டர்களிடம் கூறினோம்.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்

அப்போது, மீன் மார்க்கெட் எதிரே உள்ள டாஸ்மாக் பாரில், எனது கணவர் மது வாங்கி குடித்ததால் தான் இறந்தார் என்பது தெரியவந்தது. அதே சமயம் அந்த பாரில் மது அருந்திய விவேக் என்பவரும் மயங்கி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. எனவே சட்டத்திற்கு புறம்பாக கடை திறக்கும் முன்பு விற்பனை செய்த மதுவை பாரில் இருந்து வாங்கி குடித்ததால் தான் எனது கணவரும், விவேக் என்பவரும் இறந்துள்ளனர்.

எனவே, பார் உரிமையாளர், ஊழியர்கள், மதுபான கடை ஊழியர்கள் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் எனது கணவர் இறப்பு தொடர்பான விசாரணை குறித்து கிழக்கு போலீசாரிடம் தகவல் கேட்கும் போது முறையான பதில் கூற மறுத்து வருகிறார்கள். விசாரணை நேர்மையான முறையில் இல்லை. எனவே, வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி முறையான விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்