ரெயிலில் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கு: வாலிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து ஐகோர்ட்டு தீர்ப்பு

ரெயில் முன்பு மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் கைதான வாலிபரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2023-07-11 06:27 GMT

சென்னை ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்தவர் ராமலட்சுமி (43). இவரது மகள் சத்யா (வயது 20) பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

அதேபகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவரது மகன் சதீஷ் (23). இவர், சத்யா மீது காதல் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சத்யா காத்திருந்தார். அப்போது அவரிடம் சதீஷ் பேச முயற்சித்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, அங்கு வந்த மின்சார ரெயில் முன்பு திடீரென சத்யாவை, சதீஷ் தள்ளி விட்டார். இதில் சத்யா உடல் துண்டு துண்டாகி பலியானார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், சதீசை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைத்து உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் சதீஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, மனுதாரர் தரப்பில், "குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. கைது செய்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ளனர். ஆங்கிலத்தில் உள்ள ஆவணங்களை, தமிழில் மொழி பெயர்த்து வழங்கவில்லை" என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சதீசை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்