பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக வழக்கு:சிறை கைதிகளை வக்கீல்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் சந்திப்பது சாத்தியமா?- அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சிறை கைதிகளை வக்கீல்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் சந்திப்பது சாத்தியமா? என்பது பற்றி அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-06-15 20:25 GMT


சிறை கைதிகளை வக்கீல்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் சந்திப்பது சாத்தியமா? என்பது பற்றி அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

வக்கீல்களுக்கு அலைச்சல்

மதுரையை சேர்ந்த ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழகத்தில் சிறையில் உள்ள கைதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நடத்தும் வக்கீல்கள், இதுசம்பந்தமாக கைதிகளை நேரில் சந்திக்க உரிய அனுமதி பெறுவது நடைமுறையாக உள்ளது. இதற்காக வக்கீல்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

இதை தவிர்க்க, வீடியோ கான்பரன்சிங் முறையில் கைதிகளை வக்கீல்கள் சந்திக்க அனுமதித்தால் வசதியாக இருக்கும். குறிப்பாக வெளியூர்களில் இருக்கும் கைதிகளிடம் பேசுவதற்கு பல்வேறு சிரமங்களை வக்கீல்கள் எதிர்கொள்கின்றனர். எனவே கைதிகளை சந்திக்க வீடியோ கான்பரன்சிங் முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள் கருத்து

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பல்வேறு கோர்ட்டுகளில் வசதிகளை மேம்படுத்த வழங்கப்படும் நிதியை விட குறைவான நிதியே மதுரை ஐகோர்ட்டுக்கு ஒதுக்கப்படுகிறது என கருத்து தெரிவித்தனர்.

பின்னர் கைதிகளை வீடியோ கான்பரன்சிங் முறையில் வக்கீல்கள் சந்திப்பது சாத்தியமா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்