கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் ரங்கநாதன் சாலை பகுதியை சேர்ந்தவர் டேவிட் ராஜன் (வயது 50). இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய காரை, வீட்டின் முன்புற வளாகத்தில் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று காலை அந்த காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் கார் வேகமாக தீப்பற்றி எரியத்தொடங்கியது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டேவிட்ராஜன், உடனடியாக இதுபற்றி விழுப்புரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும் காரின் முன்பகுதி முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தது. வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.