முல்லைப்பெரியாற்றுக்குள் கார் பாய்ந்தது; 4 பேர் உயிர் தப்பினர்
சின்னமனூர் அருகே முல்லைப்பெரியாற்றுக்குள் கார் பாய்ந்தது. இந்த விபத்தில் 4 பேர் உயிர் தப்பினர்.
ஆற்றுக்குள் பாய்ந்த கார்
தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (வயது 28). இவர் தனது நண்பர்களான சின்னமனூர் சொக்கநாதபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார் (30), கூத்தனூரை சேர்ந்த பாரதிராஜா (28), சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கள்ளபட்டியை சேர்ந்த நாச்சம்மை (25) ஆகியோருடன் ஒரு காரில் மார்க்கையன்கோட்டை அருகே உள்ள எல்லப்பட்டி முல்லைப்பெரியாற்றுக்கு சென்றார். அங்கு அவர்கள் குளித்துவிட்டு, சின்னமனூர் நோக்கி புறப்பட்டனர். காரை பாண்டீஸ்வரன் ஓட்டினார்.
சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையை அடுத்த முல்லைப்பெரியாற்றின் இரட்டைப் பாலத்தில் கார் வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. காரில் இருந்தவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர். கண்ணிமைக்கும் நேரத்தில், பாலங்களின் இடையே உள்ள பகுதி வழியாக முல்லைப்பெரியாற்றுக்குள் கார் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.
4 பேர் உயிர் தப்பினர்
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே சின்னமனூர் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து வந்து காரில் இருந்த பாண்டீஸ்வரன் உள்பட 4 பேரை படுகாயங்களுடன் மீட்டனர். அவர்களை சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முல்லைப்பெரியாற்றுக்குள் கார் பாய்ந்து 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.