சாலையோர வாய்க்காலில் கார் கவிழ்ந்தது
கூடலூர்-மலப்புரம் மலைப்பாதையில் சாலையோர வாய்க்காலில் கார் கவிழ்ந்தது.
கூடலூர்
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
அப்போது மலைப்பிரதேசத்தில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்கும் வழிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கர்நாடக பதிவு எண் கொண்ட கார் கூடலூர் வழியாக கேரள மாநிலம் மலப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கூடலூர்-மலப்புரம் மலைப்பாதையில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காருக்குள் சிக்கியிருந்த சுற்றுலாப் பயணிகளை லேசான காயங்களுடன் மீட்டனர். தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக வழிக்கடவு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த வழிக்கடவு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மீட்பு வாகனம் மூலம் கார் மீட்கப்பட்டது.