விபத்தில் சிக்கிய மாநகராட்சி ஆணையாளர் கார்

விபத்தில் மாநகராட்சி ஆணையாளர் கார் சிக்கியது.

Update: 2022-06-09 21:54 GMT

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் நேற்று மாலை கலெக்டர் அலுவலகம் செல்வதற்காக அரசு காரில் புறப்பட்டார். அந்த காரை டிரைவர் குபேந்திரன் (வயது 45) ஓட்டினார். சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் உள்ள பெரியார்நகர் வளைவு பகுதியில் சாலையை கடப்பதற்காக அந்த கார் நின்று கொண்டு இருந்தது. அப்போது ரெயில் நிலையத்தில் இருந்து சூரம்பட்டி நால்ரோடு நோக்கி ஈ.வி.என்.ரோட்டில் சந்தானம் (47) என்பவர் ஓட்டிச்சென்ற கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார் எதிர்பாராதவிதமாக எஸ்.கே.சி.ரோட்டில் இருந்து ஈ.வி.என்.ரோட்டை கடக்க முயன்ற ஒரு ஸ்கூட்டர் மீது மோதியது. தொடர்ந்து ஒரு மொபட் மீது மோதிய கார் சாலையோரமாக உள்ள கம்பத்தில் மோதி நின்றது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது.

கார் மோதிய வேகத்தில் ஸ்கூட்டர் மாநகராட்சி ஆணையாளர் கார் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஈரோடு ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்த அண்ணாமலை (50) படுகாயம் அடைந்தார். இதேபோல் விபத்தில் சிக்கிய மொபட்டை ஓட்டி வந்த சூரம்பட்டி பூசாரி சென்னிமலை வீதியை சேர்ந்த அகஸ்டின் (50) என்பவரும் காயம் அடைந்தார். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மாநகராட்சி ஆணையாளரின் கார் விபத்தில் சிக்கியதால், ஆணையாளர் சிவக்குமார் மற்றொரு அரசு காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த விபத்தினால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்