சிறுமி தவறி விழுந்ததால் பஸ்சை சிறைபிடித்து போராட்டம்
வாணியம்பாடி அருகே சிறுமி தவறி விழுந்ததால் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி அடுத்த கனகநாச்சி அம்மன் கோவில் பகுதியில் இருந்து நேற்று காலை வாணியம்பாடி நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ், பாட்டூர் என்ற இடத்தில் உள்ள பஸ் நிறுத்த பகுதியில் பயணிகள் ஏறுவதற்காக நின்றது.
அதில் பயணிகள் ஏறிக்கொண்டிருந்தபோதே திடீரென பஸ்சை டிரைவர் நகர்த்தியதாக தெரிகிறது. அப்போது பஸ்சில் ஏறிக்கொண்டிருந்த நெக்குந்தியை சேர்ந்த சிறுமி நிலைதடுமாறி கீழே விழுந்தாள். இதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அங்கிருந்தவர்கள் டிரைவரை கண்டித்து பஸ்சை அங்கிருந்து செல்ல விடாமல் சிறைபிடித்தனர்.
பின்னர் சிறுமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள் டிரைவர் கண்டக்டரை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திம்மாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்து பஸ்சை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.