அரசு பஸ் மரத்தில் மோதி விபத்து; மாணவர்கள் உள்பட 24 பேர் படுகாயம்

மகேந்திரமங்கலம் அருகே அரசு பஸ் மரத்தில் மோதிய விபத்தில் மாணவர்கள் உள்பட 24 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-07-06 16:40 GMT

பாலக்கோடு:

மகேந்திரமங்கலம் அருகே அரசு பஸ் மரத்தில் மோதிய விபத்தில் மாணவர்கள் உள்பட 24 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

மரத்தில் பஸ் மோதியது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து தர்மபுரிக்கு அரசு பஸ் ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை வந்து கொண்டு இருந்தது. மகேந்திரமங்கலம் அருகே சூடப்பட்டி நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் கணேசன் பிரேக் பிடித்து உள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த ஆல மரத்தின் மீது மோதியது.

அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி பஸ்சின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் பெங்களூருவை சேர்ந்த முனியம்மாள் (வயது 70), முத்து (47), ஓசூரை சேர்ந்த மோகன்குமார் (55), சீங்கேரி சித்ரா (23), சுகந்தன் (1), கும்மனூர் நாகராஜ் (35), கண்ணுடையன்அள்ளி அருள் (34), சொர்னம்பட்டி முரளி (19) மேகநாதன் (6), பிரவின்குமார் (17) உள்ளிட்ட 3 பள்ளி மாணவர்கள் உள்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். இந்த விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் ஆல மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்