கடைக்குள் புகுந்து அண்ணன் குத்திக்கொலை
கடைக்குள் புகுந்து அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல் தனது வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்,
கடைக்குள் புகுந்து அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல் தனது வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சொத்து பிரச்சினை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 58). இவர் அதே பகுதியில் எழுதுபொருட்கள் கடையும், மிக்சி, கிரைண்டர் பழுதுபார்ப்பு கடையும் நடத்தி வந்தார். இவருடைய தம்பி மொட்டையசாமி (55). கூலி ெதாழிலாளி. இவர்கள் இருவரது வீடுகளும் அடுத்தடுத்து உள்ளன. அண்ணன்-தம்பிக்கு இடையே சொத்துப்பிரச்சினையால் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பொன்ராஜ் நேற்று காலை 8.30 மணி அளவில் கடையில் இருந்தார். அப்போது, தம்பி மொட்டையசாமி அங்கு வந்தார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை கவனித்த அக்கம்பக்கத்தினர், அண்ணன்-தம்பிக்கு இடையே ஏற்படும் வழக்கமான தகராறுதான் என நினைத்துள்ளனர்.
குத்திக்கொலை
சற்று நேரத்தில் அங்கிருந்து மொட்டையசாமி தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் பொன்ராஜ் கடைக்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கத்திக்குத்து காயங்களுடன் அவர் ரத்த வெள்ளத்தில் கடைக்குள் பிணமாக கிடந்தார்.
உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். தகவல் அறிந்து சாத்தூர் தாலுகா போலீசாரும் விரைந்து வந்தனர். பொன்ராஜ் உடலை பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். துணை சூப்பிரண்டு வினோஜியும் நேரில் விசாரணை நடத்தினார்.
சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, அண்ணன்-தம்பிக்கு இடையே சற்று நேரத்துக்கு முன்பு ஏற்பட்ட வாக்குவாதம் பற்றி போலீசாருக்கு தெரியவந்தது. எனவே மொட்டையசாமியை பிடிக்க அவரது வீட்டுக்கு போலீசார் விரைந்தனர்.
டி.வி. பார்த்தார்
அண்ணனை கொலை செய்ததால் அவர் எங்காவது தப்பி ஓடி இருக்கலாம் என போலீசார் கருதினர். ஆனால், தனது வீட்டில் போலீசாரை பார்த்ததும் எந்த பதற்றமும் இல்லாமல், மொட்டையசாமி டி.வி. பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தபோதுதான், மொட்டையசாமி குடும்பத்தினருக்கே இந்த கொலை குறித்து தெரியவந்ததாக கூறப்படுகிறது.
நடந்தது என்ன?
அவரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:- ஒரு நிலம் சம்பந்தமாக மொட்டையசாமிக்கும், அவருடைய அண்ணன் பொன்ராஜூவுக்கும் பிரச்சினை இருந்துள்ளது. மது குடித்துவிட்டு மொட்டையசாமி அவ்வப்போது தகராறு செய்வது வாடிக்கை. முந்தைய நாள் இரவிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில்தான் காலையில் ெபான்ராஜ் கடையில் இருந்தபோது அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பொன்ராஜ் அலறல் சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க அவரது வாயை பொத்தி குத்தியதாகவும் தெரியவருகிறது. இதனால்தான் அக்கம்பக்கத்தினருக்கு உடனடியாக தெரியவில்லை என நினைக்கிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
கொலை செய்யப்பட்ட பொன்ராஜூவுக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். இதே போல் கைதான மொட்டையசாமிக்கும் மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.