மரக்கிளை முறிந்து விழுந்தது; மின்கம்பங்கள் சாய்ந்தன
மரக்கிளை முறிந்து விழுந்தது; மின்கம்பங்கள் சாய்ந்தன
திருவாரூரில் பெய்த பலத்த மழையால் மரக்கிளை முறிந்து விழுந்தது. மேலும் மின்கம்பங்கள் சாய்ந்ததால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பலத்த இடியுடன் கனமழை
திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வந்தனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் குளிர்ந்த காற்று வீசி வந்தது. இதையடுத்து 2 மணி நேரத்திற்கு மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த இடியுடன் கனமழை பெய்தது.
இந்த மழையால் திருவாரூர் நகர் பிடாரி கோவில் தெருவில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான அரச மரத்தின் கிளை ஒன்று முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை பிரதான சாலையில் இருந்த 2 இரும்பு மின்கம்பங்கள் சாய்ந்தன. இதையடுத்து உடனடியாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.
போக்குவரத்து மாற்றம்
திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மின்கம்பம் சாய்ந்த மயிலாடுதுறை செல்லும் புதுத்தெரு சாலையில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.
நேற்று காலை மின்சார வாரிய ஊழியர்கள் சாய்ந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்கள் நட்டு மின்பாதையை சீரமைத்தனர். தொடர்ந்து திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் வழக்கம் போல் போக்குவரத்து தொடங்கியது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் பயிர்கள் கருகி வந்த நிலையில் இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
திருவாரூர்-21, நன்னிலம்-50, குடவாசல்-11, வலங்கைமான்-11, மன்னார்குடி-17, நீடாமங்கலம்-13, பாண்டவையாறு தலைப்பு-4, திருத்துறைப்பூண்டி-5. அதிகப்பட்சமாக நன்னிலத்தில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.