களிமண் சேறுபூசி சிறுவர்கள் நேர்த்திக்கடன்
கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள அழகு வள்ளியம்மன் கோவில் ஆவணி பொங்கல் விழாவில், சிறுவர்கள் உடல் முழுவதும் களிமண் சேறுபூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கமுதி,
கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள அழகு வள்ளியம்மன் கோவில் ஆவணி பொங்கல் விழாவில், சிறுவர்கள் உடல் முழுவதும் களிமண் சேறுபூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அழகு வள்ளியம்மன் கோவில்
கமுதி அருகே செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோவிலில் ஆவணி பொங்கல் திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். பின்னர் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
11-ந்தேதி இரவு பெண்கள் திருவிளக்கு பூஜை கூட்டு வழிபாடு நடத்தினர். இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல் பாடி பூஜை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு வாணவேடிக்கை மேளதாளங்களுடன் கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல் மற்றும் கரும்பாலை தொட்டில், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
களிமண் சேறு பூசி...
முன்னதாக சிறுவர்கள் ஏராளமானோர் உடல் முழுவதும் களிமண் சேறு பூசி சேர்த்தாண்டி வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர் அப்பகுதியில் உள்ள ஊருணியில் உடல் முழுவதும் சேறு பூசி, மேள தாளத்துடன் கையில் வேப்பிலையுடன் ஆடிக்கொண்டு, கிராமத்தில் இருந்து அழகு வள்ளியம்மன் கோவில் வரை வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் மாலையில் சாக்கு வேடம் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். 300-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று அம்மன் கோவிலை வலம் வந்து ஆற்றில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.