சிறுமியை பாலியல்பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-01-23 18:45 GMT


17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

17 வயது சிறுமி கடத்தல்

கோவையை அடுத்த மதுக்கரை மேட்டான்காடு பகுதியை சேர்ந் தவர் மதன்குமார் (வயது23). கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளி. இவருக்கு கோவையை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த சிறுமி, தனக்கு 40 வயது உறவினர் ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெற்று வருவதாக மதன்குமாரிடம் கூறியுள்ளார்.

உடனே அவர், அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 18.8.2020 அன்று மதன்குமார், சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத போது சென்று ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத் காரம் செய்துள்ளார். மேலும் அவர், சிறுமியை கடத்திச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

20 ஆண்டு சிறை

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பல இடங்களிலும் தேடினர். ஆனால் சிறுமி கிடைக்க வில்லை. இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்தநிலையில் சிறுமியை கடத்திய மதன்குமாரை போலீசார் மடக்கி பிடித்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கு கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு போக்சோ சட்டத்தில் மதன்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம்சாட்டப்பட்ட மதன்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். தண்டனை விதிக்கப்பட்ட மதன்குமார் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்