எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பா.ஜ.க. அச்சம் அடைந்துள்ளது- மதுரையில் கி.வீரமணி பேட்டி

எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பா.ஜ.க. அச்சமடைந்துள்ளது என மதுரையில் கி.வீரமணி கூறினார்.

Update: 2023-07-02 20:43 GMT

எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பா.ஜ.க. அச்சமடைந்துள்ளது என மதுரையில் கி.வீரமணி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

மதுரை மாட்டுத்தாவணியில் தென் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகின்ற தேர்தல் சாதாரண அரசியல் தேர்தல் அல்ல. லட்சியவாதிகளுக்கும், சமூக அநீதியாளர்களுக்கும் இடைய நடக்கும் தேர்தல். மத்தியில் உள்ள பா.ஜ.க. எப்படியாவது குறுக்கு வழியை கையாண்டு தமிழகத்தை காவிமயமாக்க நினைக்கிறது. ஆனால் அது நடைபெறாது. இது பெரியார் மண். பா.ஜ.க. பல குறுக்கு வழிகளை கையாண்டு வருகிறது. அதை ஒடுக்கும் விதமாக தீவிர பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம். கவர்னர் தமிழகத்தில் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். அரசியல் சட்டத்தை படிக்காமலே பிரமாணம் எடுத்துள்ளார். தமிழக அரசுக்கு நேர் எதிராக செயல்படும் கவர்னரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை தருவது சிவக்குமார் அல்ல. காவிரி நதி நீர் ஆணையம் தான். இது போன்ற பிரச்சினைகளால் நாங்கள் பிரியமாட்டோம். வாயும் வயிறும் வேறதான். பா.ஜ.க. ஓட்டு வாங்கி ஆட்சி அமைத்ததாக வரலாறே கிடையாது. வெற்றி பெற்ற நபர்களை விலைக்கு வாங்குவது, கட்சிகளை உடைப்பது தான் பா.ஜ.க.வின் வழக்கம். முதலில் சிவசேனா கட்சியை உடைத்தார்கள். தொடர்ந்து தமிழகத்தை உடைக்க நினைக்கிறார்கள். இங்கே முடியாது. இது தந்தை பெரியார் பூமி. இங்கு யாரையும் விலைக்கு வாங்க முடியாது.

அச்சம்

எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பா.ஜ.க. அச்சமடைந்துள்ளது. பா.ஜ..க. தோல்வியின் அச்சத்தால் கட்சியை உடைக்க நினைக்கிறார்கள் அது முடியாது. கர்நாடகத்தில் என்ன ஆட்டம் போட்டார்கள், முடிவு என்ன ஆனது. தென் மாநிலங்களின் பா.ஜ.க.வின் கதவு சாத்தப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். இருப்பதால் 2024-ல் மோடி பா.ஜ.க வேட்பாளராக இருப்பாரா என தெரியவில்லை, இருந்தாலும் கவலை இல்லை. இவர்களை பொறுத்தவரை எப்படியாவது 6 மாநில தேர்தலோடு சேர்த்து நாடாளுமன்ற தேர்தலை வைக்கலாம் என்ற திட்டம் உள்ளது. முன்கூட்டியே தேர்தல் வைப்பதால் எங்களுக்கு கவலை இல்லை. எதிர்க்கட்சிகள் சந்திக்க ஆயத்தமாக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்