டீக்கடைக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம்
கொள்ளையர்களை போல லாவகமாக ஷட்டரை திறந்து டீக்கடைக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்தன. அவை உணவு பொருட்கள், பாத்திரங்களை சேதப்படுத்தின.
ஊட்டி
கொள்ளையர்களை போல லாவகமாக ஷட்டரை திறந்து டீக்கடைக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்தன. அவை உணவு பொருட்கள், பாத்திரங்களை சேதப்படுத்தின.
கரடிகள் அட்டகாசம்
நீலகிரி மாவட்டம் 60 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதியை கொண்டுள்ளதால், இங்கு யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகளும் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த நிலையில் சமீப காலமாக வனப்பகுதியில் தீவன பற்றாக்குறை, அதிகரித்து வரும் கட்டிடங்கள் உள்பட பல்வேறு காரணங்களால் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது இதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஊட்டியை அடுத்த கல்லட்டி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் 4 கரடிகள் புகுந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள 3 கடைகளின் ஷட்டர்களை கொள்ளையர்களை போல லாவகமாக தூக்கிவிட்டு உள்ளே சென்று பொருட்களை சேதபடுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன.
கண்காணிப்பு கேமரா காட்சி
டீக்கடைக்குள் புகுந்த அந்த கரடிகள் பாத்திரங்களையும், உணவு பொருட்களையும் வெளியே தூக்கி வந்து நாசபடுத்தின. அத்துடன் ஜோடியாக சேர்ந்து கொண்டு வீடு, வீடாக உணவு தேடி சென்றன. இதனால் அந்த கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
கரடிகள் கடைகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துவிட்டு அந்த பகுதியில் சுற்றித்திரிந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியானதால் அந்த பகுதி மக்கள் கூடுதல் பதற்றம் அடைந்துள்ளனர். இதையடுத்து அந்த கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.