தோட்டத்திற்கு காவலுக்கு சென்ற விவசாயியை துரத்திய கரடி
களக்காடு அருகே தோட்டத்திற்கு இரவு காவலுக்கு சென்ற விவசாயியை கரடி துரத்தியதில் தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மஞ்சுவிளை ஊருக்கு மேற்கே பச்சையாறு அணை பகுதியில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளன. அதில் விவசாயிகள் வாழைகளை பயிர் செய்துள்ளனர். சமீபகாலமாக இங்கு வனப்பகுதியில் இருந்து வரும் கடமான், கரடி, காட்டு பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இவை பயிர்களை நாசம் செய்வதால், வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் இரவில் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மஞ்சுவிளையை சேர்ந்த விவசாயி இஸ்ரவேல் (வயது 55) தனக்கு சொந்தமான தோட்டத்தில் இரவில் காவலுக்காக சென்றார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த கரடி ஒன்று எதிர்பாராத விதமாக இஸ்ரவேலை தாக்க பாய்ந்து துரத்தியது. இதனால் திடுக்கிட்ட அவர் பயந்து ஓட்டம் பிடித்தார். இதில் அவர் தவறி கீழே விழுந்து சத்தம் போட்டார். அருகில் உள்ள தோட்ட விவசாயிகள் வரவே கரடி அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இந்த சம்பவத்தில் கீழே விழுந்ததில் இஸ்ரவேலுக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது. இதற்கான அவர் களக்காடு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து ஊருக்குள் புகும் வனவிலங்குகளை விரட்ட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.