குடமுருட்டி, கோரையாற்றின் கரைகள் பலப்படுத்தப்படும்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
வெள்ளப்பெருக்கில் இருந்து பாதுகாக்க குடமுருட்டி, கோரையாற்றின் கரைகள் பலப்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்
திருச்சி, ஜூன்.15-
வெள்ளப்பெருக்கில் இருந்து பாதுகாக்க குடமுருட்டி, கோரையாற்றின் கரைகள் பலப்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்
குடமுருட்டி ஆறு
திருச்சி-கரூர் சாலையில் உள்ள குடமுருட்டி ஆறு, உய்யகொண்டான் வாய்க்கால், குழுமாயி அம்மன் ஆறுகண் பாலம் அருகில் உள்ள கோரையாறு, திண்டுக்கல் சாலையில் உள்ள கோரையாறு, ராமச்சந்திரா நகர் சோதனைச்சாவடி அருகில் உள்ள கோரையாறு மற்றும் பஞ்சப்பூரில் அமையவுள்ள ஒருங்கிணைந்த பஸ் நிலையம் வரை உள்ள பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு பணிகளுக்கு பிறகு நிருபர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து திருச்சியில் புதிதாக அமைய உள்ள புதிய பஸ் நிலையம் வரை கரைகள் பலப்படுத்தப்பட்டு 8 மீட்டர் அகலத்திற்கு சாலைகள் அமைப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்றது. இந்த சாலை பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தால் சுமார் 2 லட்சம் பொதுமக்கள் பிரதான சாலைகளுக்கு வராமல் இந்த வழிகளை பயன்படுத்திக்கொள்வார்கள்.
போக்குவரத்து நெரிசல் குறையும்
இந்த பணிகள் மூலம் வெகுவாக போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் தூர்வாரப்படும் ஆறுகளின் கரைகளை பலப்படுத்துவதால் வெள்ளப்பெருக்கில் இருந்து திருச்சி நகரப்பகுதிகள் பாதுகாக்கப்படும். உறையூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தால் அந்த பகுதியில் சாக்கடை கால்வாய்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த பகுதியில் உள்ள சாலைகள் சீர் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் தலைமை செயலாளர் சாய்குமார், மாவட்ட கலெக்டர் சிவராசு, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.