வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் கடை முன்பு வங்கி மேலாளர் தர்ணா

திருப்பத்தூர் அருகே வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் கடை முன் வங்கி மேலாளர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2023-01-13 17:58 GMT

ரூ.1½ கோடி கடன்

திருப்பத்தூரை அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அருணகிரி (வயது 47). இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கச்சேரி தெருவில் உள்ள இந்தியன் வங்கியில் ரூ.1½ கோடி கடன் பெற்று விஷமங்கலம் பகுதியில் ஹார்டுவேர் கடையை, தனது தம்பி பிரபாகரனுடன் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வங்கியில் வாங்கிய கடன் இதுவரை வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடியே 75 லட்சம் ஆகியுள்ளது. வட்டி தவணை ரூ.10 லட்சம் மட்டுமே செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில் வங்கியின் மூலம் பலமுறை பணத்தை வசூல் செய்ய அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால் பணத்தை செலுத்தவில்லை. வட்டியும் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. வங்கி மூலம் பல முறை நோட்டீஸ் மற்றும் நேரில் வந்து பணத்தை கட்ட சொல்லி கேட்டுள்ளனர். ஆனால் வங்கி அதிகாரிகளுக்கு முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.

மேலாளர் தர்ணா

இந்த நிலையில் நேற்று பணம் கேட்க வந்த வங்கி மேலாளர் ஏமன்குமாரிடம் பணத்தை தர முடியாது என்று கூறி அவமதித்ததாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து மேலாளர் ஏமன் குமார் பணத்தை வாங்காமல் இங்கிருந்து செல்ல மாட்டேன் எனக்கூறி கடையின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், அங்கு வந்த மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வங்கி மேலாளரை சமாதானம் செய்து, கடன் பெற்ற நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு அவர் கால அவகாசம் கேட்டதையொட்டி, மேலாளர் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்