முழுமையாக நிறைவேறும்போது இளைஞர்களையும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் விவசாயத்தில் ஈடுபட வைக்கும்; பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்

முழுமையாக நிறைவேறும்போது இளைஞர்களையும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் விவசாயத்தில் ஈடுபட வைக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரி கூறினார்.

Update: 2023-08-06 21:44 GMT

சென்னிமலை

முழுமையாக நிறைவேறும்போது இளைஞர்களையும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் விவசாயத்தில் ஈடுபட வைக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரி கூறினார்.

நீரேற்று நிலையங்களை பார்வையிட்டனர்

அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்காக ஈரோடு் மாவட்டம் பவானி, திருவாச்சி, நல்லகவுண்டம்பாளையம் உள்ளிட்ட 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இவற்றை சென்னை பொதுப்பணித்துறையின் மூத்த பொறியாளர் சங்க தலைவர் ஏ.வீரப்பன் தலைமையிலான ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் 15-க்கும் மேற்பட்டோர் நேற்று பார்வையிட்டனர்.அப்போது அவர்களுக்கு பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் சிவலிங்கம்(ஈரோடு), கண்காணிப்பு பொறியாளர் மன்மதன் மற்றும் உதவி பொறியாளர்கள் அத்திக்கடவு-அவினாசி திட்டம் குறித்து விளக்கினார்கள். பின்னர் இவர்கள் அனைவரும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.அதன்பின்னர் சென்னை பொதுப்பணித்துறையின் மூத்த பொறியாளர் சங்க தலைவர் ஏ.வீரப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்வம்

பொதுப்பணித்துறையின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் முதல்முறையாக அத்திக்கடவு-அவினாசி திட்டம் தான் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களின் ஒத்துழைப்பால் இந்த திட்டம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

பெரும்பாலான விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு செல்கின்றனர். ஆனால் இந்த திட்டம் முழுமையாக நிறைவேறும் போது நிலத்தடி நீர் செறிவூட்டுதல் அடையும்.மேலும் இன்றைய இளைஞர்களையும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த திட்டம் உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் புதுப்பாளையம் சி.மோகன் மற்றும் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்