வீட்டில் கொள்ளையடித்த 150 பவுன் நகையை கிணற்றில் பதுக்கிய ஆசாமி

காஞ்சீபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 பவுன் நகையை விவசாய கிணற்றில் ஆசாமி பதுக்கியது தெரியவந்தது. கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி நகைளுடன் இருந்த பிளாஸ்டிக் பண்டல் கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2023-03-30 17:08 GMT

காஞ்சீபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 பவுன் நகையை விவசாய கிணற்றில் ஆசாமி பதுக்கியது தெரியவந்தது. கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி நகைளுடன் இருந்த பிளாஸ்டிக் பண்டல் கண்டுபிடிக்கப்பட்டது.

வெளிநாட்டுக்கு சுற்றுலா

காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடையை நடத்தி வருபவர் சத்யமூர்த்தி. இவரது வீடு கண்ணப்பர் தெருவில் உள்ளது. இந்த நிலையில் சத்தியமூர்த்தி தனது குடும்பத்தினருடன் கடந்த 13-ந்தேதி வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து 21-ந்தேதி வீட்டுக்கு திரும்பியவர்கள் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் விஷ்ணு காஞ்சி போலீசார் சத்தியமூர்த்தி வீட்டில் சோதனை செய்தனர். அப்போது படுக்கை அறையில் இருந்த பீரோவில் வைத்திருந்த 150 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வந்தனர்.

கிணற்றில் இருந்த பிளாஸ்டிக் பண்டல்

இந்த நிலையில் காஞ்சீபுரத்தை சேர்ந்த குணா என்ற குற்றவாளியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை பிளாஸ்டிக் கவரில் பொட்டலமாக சுற்றி காஞ்சீபுரம் கலவை சாலையில் வெம்பாக்கம் தாலுகா திருப்பனூர் சேலரி இடையில் வெங்கட்ராயன் பேட்டை பகுதியில் உள்ள பூபதி என்பவருக்கு சொந்தமான வயல்வெளி கிணற்றில் வீசி சென்று இருப்பதாக கூறினார்.

இதனையடுத்து காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் போலீசார் முன்னிலையில் செய்யாறு தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் கிணற்றில் தேடிய போது ஏதும் கிடைக்கவில்லை.

தொடர்ந்து காஞ்சீபுரம் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் காஞ்சீபுரம் தீயணைப்பு வீரர்கள் ராட்சத மோட்டார் உதவியுடன் கிணற்றில் இருந்த தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றினர். பின்னர் சேற்றில் சிக்கி இருந்த பிளாஸ்டிக் பண்டல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பண்டலை சம்பவ இடத்தில் பிரிக்காமல் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு போலீசார் எடுத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்