2 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
கடலூரில், பெண்ணை கொலை செய்ய முயன்ற 2 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கடலூர்:
கடலூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி ராஜம் (வயது 57). அதே ஊரை சேர்ந்தவர் இளங்கோ மகன் தங்கபாண்டியன் என்கிற ஏழுமலை (27). இவர்கள் 2 குடும்பத்திற்கும் கடந்த 28.2.2021 அன்று ஏற்பட்ட தகராறில் ராஜம் மகன் பிரபுவை தங்கபாண்டியன் உள்பட 3 பேர் அடித்துக்கொலை செய்து விட்டதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தங்கபாண்டியன் கடந்த 7-ந்தேதி, அவரது நண்பரான கம்மியம்பேட்டை ராஜேந்திரன் மகன் சதீஷ் என்கிற ஹரிதாஸ் (21) என்பவருடன் ராஜம் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த அவரிடம் பிரபு கொலை வழக்கில் சாட்சி சொல்ல போகக்கூடாது என்று தடுத்து, ஆபாசமாக பேசி மானபங்கப்படுத்தி கொலை முயற்சி செய்துள்ளனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இது பற்றி ராஜம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியன், சதீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். இதில் தங்கபாண்டியன் மீது திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, புதுச்சேரி கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு, பெரிய கடை போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு என 3 வழக்குகள் உள்ளன.
சதீஷ் மீது திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள், 4 கொள்ளை வழக்குகள் என 6 வழக்குகள் உள்ளன.
இவர்களின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில், தங்கபாண்டியன், சதீஷ் ஆகிய 2 பேரையும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் அவர்களிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.