வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
டிரைவர் கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் அருண்கார்த்திக் (வயது 24). டிரைவர். இவர் தனது நண்பர்களான சூர்யபிரகாஷ் (26), அரவிந்த் (23) ஆகியோருடன் கடந்த மாதம் 10-ந்தேதி சந்திராபுரம் பகுதியில் உள்ள கல் குவாரிக்கு மது அருந்த சென்றார்.
அப்போது பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அருண்கார்த்திக்கை, சூரியபிரகாஷ், அரவிந்த் ஆகியோர் கல்லால் தாக்கி கொலை செய்தனர். இதுகுறித்த பொள்ளாச்சி நகர மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சூர்யபிரகாசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், கலெக்டர் கிராந்திகுமாருக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து கலெக்டர் சூர்யபிரகாசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அதற்கான உத்தரவு நகல் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.