ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது

திருப்பூரில் மாநகராட்சி ஒப்பந்ததாரருக்கு பணி செய்ததற்கான பில் தொகையை வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-19 14:24 GMT

திருப்பூர்

திருப்பூரில் மாநகராட்சி ஒப்பந்ததாரருக்கு பணி செய்ததற்கான பில் தொகையை வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.25 ஆயிரம் லஞ்சம்

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் உதவி பொறியாளராக சந்திரசேகர் (வயது 53) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த மண்டலத்திற்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் மாநகராட்சியின் குடிநீர் குழாய் பதிப்பு பணியை திருப்பூர் பெரியாண்டிப்பாளையத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் பழனிவேல் (56) மேற்கொண்டு வந்தார். மொத்தம் 6 பணிகளை எடுத்து செய்து முடித்த அவர், பணிக்கான பில் தொகையை கேட்டுள்ளார். பில் தொகையை, எம் பாஸ்புக்கில் பதிவு செய்து வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று சந்திரசேகர் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பழனிவேல், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அறிவுரையின்படி, ரசாயன பொடி தடவிய ரூ.25 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு பழனிவேல், திருப்பூர்-அவினாசி ரோடு குமார் நகர் மேல்நிலைத்தொட்டி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து உதவி பொறியாளர் சந்திரசேகரிடம் கொடுத்துள்ளார்.

உதவி பொறியாளர் கைது

அங்கு ஏற்கனவே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான போலீசார் பாய்ந்து சென்று லஞ்ச பணத்துடன் உதவி பொறியாளர் சந்திரசேகரை கையும் களவுமாக பிடித்தனர். அதன்பின்னர் அவரிடம் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடந்தது.

பின்னர் உதவி பொறியாளர் சந்திரசேகரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். இளநிலை பொறியாளராக இருந்த சந்திரசேகர், சமீபத்தில் தான் உதவி பொறியாளராக பதவி உயர்வு பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்