அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது

களக்காடு அருகே அட்டகாசம் செய்து வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

Update: 2022-09-22 19:18 GMT

களக்காடு:

களக்காடு அருகே அட்டகாசம் செய்து வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

கரடிகள் அட்டகாசம்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பூதத்தான்குடியிருப்பு கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக 3 கரடிகள் அட்டகாசம் செய்து வந்தன. பகலில் மலையடிவார புதர்களில் தஞ்சமடையும் கரடிகள் இரவில் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் களக்காடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் பூதத்தான்குடியிருப்பு கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் அங்குள்ள களக்காடு-சேரன்மாதேவி பிரதான சாலையை ஒட்டியுள்ள வேம்படி சுடலைமாடசாமி கோவிலில் விளக்கேற்றும் எண்ணெயை குடிப்பதற்காக கரடிகள் அடிக்கடி வந்து சென்றதை உறுதிப்படுத்தினர்.

கூண்டில் சிக்கியது

இதையடுத்து அங்கு கரடிகளை பிடிக்க கடந்த 20-ந் தேதி முதல் கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அப்பகுதிக்கு கரடி ஒன்று வந்தது. அந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராமமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கரடியை பார்த்து சென்றனர். மேலும் கூண்டுக்குள் சிக்கியதால் மிரண்ட கரடி தப்பிக்கும் எண்ணத்தில் கூண்டுக்குள் முட்டி மோதியது. இதனால் அந்த கரடிக்கு ரத்தக்காயங்கள் ஏற்பட்டது. பின்னர் கரடியை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

கூண்டில் சிக்கிய கரடி 5 வயதுடைய ஆண் கரடி என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

பொதுமக்கள் கோரிக்கை

கூண்டில் சிக்கி காயம் அடைந்த கரடிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் ஊருக்குள் சுற்றித்திரியும் 2 கரடிகளையும் உடனடியாக பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்