செல்போனுக்கு செலுத்திய தொகையை வாலிபருக்கு திரும்ப வழங்க வேண்டும்

ஆர்டர் செய்தும் அனுப்பாததால் செல்போனுக்கு செலுத்திய தொகையை வாலிபருக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று ஆன்லைன் நிறுவனத்துக்கு கோவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-09-02 15:08 GMT

ஆர்டர் செய்தும் அனுப்பாததால் செல்போனுக்கு செலுத்திய தொகையை வாலிபருக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று ஆன்லைன் நிறுவனத்துக்கு கோவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

செல்போன்

கோவையை அடுத்த அத்திப்பாளையம் அருகே கோவிந்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 27). இவர், 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி ஆன்லைன் நிறுவ னத்தில் மூலம் செல்போன் வாங்க ரூ.25 ஆயிரத்து 990-ஐ தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று செலுத்தினார்.

அப்போது ஒருவாரத்துக்குள் செல்போன் வந்து சேரும் என்று ஆன்லைன் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அந்த நிறுவனம் செல்போனை அனுப்பி வைக்கவில்லை.

கோர்ட்டில் வழக்கு

இது பற்றி முருகேசன் கேட்ட போது கோவையில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தின் பெயரை கூறி அங்கு சென்று வாங்கிக் கொள்ளுமாறு கூறி உள்ளனர். அதன்படி முருகேசன் அந்த கூரியர் நிறுவனத்துக்கு சென்று கேட்ட போது, செல்போன் எதுவும் வரவில்லை என்று கூறி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றம் செய்யப்பட்டதை அறிந்த முருகேசன், கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

திரும்ப வழங்க உத்தரவு

அதில் ரூ.25 ஆயிரத்து 990-ஐ பெற்றுக்கொண்டு செல்போன் அனுப்பாமல் ஆன்லைன் நிறுவனம் ஏமாற்றியதாகவும், இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான தனக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, செல்போன் ஆர்டர் செய்த முருகேசனிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட ஆன்லைன் நிறுவனம் அதை திரும்ப வழங்கவில்லை. இது சேவை குறைபாடு ஆகும்.

எனவே அவர் செல்போனுக்கு செலுத்திய ரூ.25 ஆயிரத்து 990-ஐயும், மனஉளைச்சலுக்காக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவாக ரூ.3 ஆயிரத்தையும் 9 சதவீத வட்டியுடன் ஒரு மாத காலத்துக்குள் ஆன்லைன் நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்