கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விவசாய தொழிலாளர்களுக்கு சட்டக்கூலியாக ரூ.600 உயர்த்தி வழங்கிட கோரியும், விவசாயத் தொழிலாளர்களுக்கென தனித்துறையை உருவாக்க கோரியும், மதுரை மாவட்டத்தில் 100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாட்களும் முழுமையாக வேலையை வழங்க கோரியும், 100 நாள் வேலைத்திட்ட நிதியை - கட்டிடம், சாலை அமைப்பு, பாலம் போன்ற கட்டுமானப் பணிகளுக்கு மாற்றம் செய்யாமல் தொழிலாளர்களின் கூலிக்கு கூடுதலாக நிதி ஒதுக்க கோரியும், வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டாவும், வீடுகட்ட ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்டக்குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் காசி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பொருளாளர் ஆறுமுகம், துணைத்தலைவர்கள் கெளசல்யா, தனசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.